முதல்வர் பதவி கைமாற்றப்படின் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபைக் கோரிக்கை மீளலும்

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது தனிப்பிரதேச சபைக் கோரிக்கைக்கும், அதனால் விடைகாண முடியாத விபரீத வினாக்களுக்கும் அப்போது விடையாக வந்த ஒருவரே கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப். அவரை ஒருபோதும் கல்முனை மக்கள் இழக்க விரும்பமாட்டார்கள் என முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் தெரிவித்தார். 

கல்முனை முதல்வருக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற சபை அமர்வுக்கு உறுப்பினர்கள் சிலர் வராமல் இருந்துகொண்டு ஊடகங்களுக்கு தவறான அறிக்கைகளை வெளியிட்டமை தொடர்பாக சபை அமர்வின்போது உரையாற்றிய அமீர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது, 

கடந்த மாதம் 28ம் திகதி கல்முனை மாநகர சபையில் ஆளும் தரப்பாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் தமது மாதாந்த குழுக் கூட்டத்தை முதல்வர் சிராஸ் மீராசாஹிபுடைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்திலே எங்களின் பிரதி முதல்வர் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். இந்த சந்திப்பிலே எங்களுடைய மாநகர சபை அமர்விலே பேசுவதற்காக பல்வேறு விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

இக்கூட்டத்தில் உறுப்பினர் உமர் அலி முதல்வர் சிராஸ் மீராசாஹிபைப் பார்த்து மிக ஆவேசத்தோடு ஒரு கேள்வியைக் கேட்க முனைந்த வேளையில், முதல்வர் மிக நிதானமாக பதிலளிப்பதற்காக இவ்வாறான அநாகரிகமான முறையில் கேள்விகளைக் கேட்டு என்னையும் அநாகரிகமாக பேசவைக்க முனையக்கூடாது. தயவுசெய்து இவ்வாறான தொனியில் கதைப்பதை நிறுத்திவிடுங்கள் என்று முதல்வர் குறிப்பிட்டார். உறுப்பினர் உமர் அலி முரண்பட்ட கருத்தோடு இருக்கின்ற வேளையில், எங்களுடைய ஏனைய 7 உறுப்பினர்களும் எங்களுக்குள் நாங்கள் ஒரு சுமுகமான நிலமைக்கு வந்து கலந்து பேசி கூட்டம் நடந்து முடிந்தது. 

அதன் பின்னர் உறுப்பினர்களான பஷீர், உமர் அலி, பறக்கத்துள்ளா ஆகிய மூவரும் இணைந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீலை அவரது கொம்டெக் நிறுவனத்தில் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். றகீபையும் அழைத்துக்கொண்டு கல்முனை மாநகர சபை ஊழல் நிறைந்த சபையாக இருக்கின்றது. முதல்வர் என்னுடன் தகாத வார்த்தைகளால் பேசி அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று ஜெமீலிடம் கூறி அவர்கள் முதல்வருக்கும், மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுக்கும் இடையில் இருக்கின்ற அரசியல் பிரச்சினைகளை சாதகமாக பயன்படுத்தி அரசியல் காய்நகர்த்தல்களை செய்திருக்கின்றார்கள். இந்த விடயத்தை கட்சிக்கும் கட்சி தலைமைக்கும் தெரியப்படுத்தாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டதுடன், அடுத்தநாள் இருக்கின்ற சபை அமர்வை பகிஷ்கரிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றார்கள். 

முதல்வரின் செயற்பாடுகள் வெளிப்படைத்தன்மையாக, நியாயமாக, மக்கள் நலனை கருத்தில் கொண்டு இருப்பதன் காரணமாக இந்த அழைப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. விடயம் இவ்வாறு இருக்கின்றபோது ஊடகங்களுக்கு உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை விடுவதன் மூலம் மாநகர சபைக்கும், முதல்வர் சிராஸ் மீராசாஹிபிற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். 

பிரதிமுதல்வர் நிஸாம் காரியப்பருடைய தலைமையில் சபையை பகிஷ்கரித்ததாக கூறியிருக்கின்றார்கள். இது பிழையான ஒரு கருத்து. இறுதியாக நடைபெற்ற சபை அமர்வுக்கு சம்மந்தப்பட்ட 6 உறுப்பினர்களும் வருகை தரவில்லை. இங்கு சபையில் ஆளுந்தரப்பு ஆசனங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இந்த 6 உறுப்பினர்களும் அவர்களுக்குள் சில கேள்விகளை கேட்டு, அவர்களே பதிலளித்துவிட்டு சபைக்கு வராமல் சபையில் ஊழல் நிறைந்திருக்கின்றது என்று குறை கூறுகின்றார்கள். ஆனால் சபை பகிஷ்கரிப்பு என்பதையும், சபைக்கு வராமை என்பதையும் தெளிவாக அவர்கள் விளங்க வேண்டும். 

உறுப்பினர் உமர் அலி மாநகர சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சகல உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட பங்கீடுகளைப் போன்று அவருக்கும் முதல்வரால் வழங்கப்பட்டிருக்கின்றது. பாரபட்சம் காட்டப்படுகிறது என்று கூறுவது அவரது மனச்சாட்சிக்கும், அவரை ஆளாக்கிய எமது கட்சிக்கும் அவர் செய்யும் துரோகமாகும். இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு, எதிர்வரும் 7ம் திகதி தலைவரிடமும் விடயத்தைக் கூறி இதற்கான ஒரு முடிவை எடுக்க இருக்கின்றோம். 

இலங்கை முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் அத்திவாரமே கல்முனை என்கின்ற நிலையில் இங்குள்ள பிரச்சினைகள் வெளிக்காட்டப்படும் விதம் மக்களை வெறுப்படையச் செய்திருக்கின்றது. இதற்குப் பின்னணியில் பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோர் இருக்கின்றார்கள். இவர்கள் சமூக நோக்கோடு பார்க்கின்றபோது கண்டிக்கப்பட வேண்டியவர்கள். எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை பேசித் தீர்க்காமல் அவர்களே இந்த சிறிய விடயத்தை பூதாகரமாக்கியிருக்கின்றார்கள். எனவே கட்சித் தலைமை இவர்களுக்கு சரியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகின்றோம். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கடந்த காலங்களிலும் பல்வேறு கட்சிக்கு உடன்பாடற்ற விதத்தில் செயற்பட்டிருக்கின்றார். இவர் என்றோ தண்டிக்கப்பட வேண்டியவர். இந்த சந்தர்ப்பத்தில் கட்சி இவரது விடயத்தில் சரியான முடிவை எடுக்கவேண்டும். 

இந்த சிறிய பிரச்சினையை பூதாகரமாக்குவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றது. முதல்வருடைய நேர்மையான, வெளிப்படைத்தன்மையான அரசியல் போக்கு சாய்ந்தமருது மக்களால் வெகுவாகக் கவரப்பட்டிருக்கின்றது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் முதல்வருக்கான சாய்ந்தமருது பிரதேச அரசியல் பலத்தை இல்லாமலாக்கி சுயநல அரசியல் செய்ய எத்தனிக்கின்றார். அது மட்டுமல்ல பிரதி முதல்வர் நிஸாம் காரியப்பர் 2 வருடங்களின் பின்னர் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலிருந்து விடயங்களை செயற்படுத்தி முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதன் விளைவாகவே இந்த பிரச்சினை உருவாகியிருக்கின்றது. 

இதில் மக்களால் மிக முக்கியமாக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை ஒன்று வேண்டும் என்ற விடயம் சென்ற காலங்களில் இங்கு பல்வேறு தரப்பினர்களாலும் பாரிய வேண்டுகோளாக முன்வைக்கப்பட்ட நிலையில், சாய்ந்தமருதிற்கான முதல்வர் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த விடயம் ஓய்ந்திருக்கின்றது. பாரிய பிரச்சினைகளை அப்போது ஏற்படுத்த இருந்த இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக வந்தவர்தான் இந்த மக்கள் சேவகன் முதல்வர் சிராஸ் மீராசாஹிபாகும். மீண்டும் இந்த பிரச்சினையை தலைதூக்க வைக்க நாம் யாரும் இடமளிக்கக்கூடாது. 

அவ்வாறு பிரச்சினை தலைதூக்கினால் அதனால் இங்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கும், விபரீதங்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். 

சிறந்த மக்கள் சேவையினூடாக மக்களின் தாகம் தீர்த்து வரும் முதவர் சிராசை ஓரங்கட்ட எடுக்கும் அநியாயமான குற்றச்சாட்டுக்களை மக்களும், கட்சித்தலைமையும் நன்கு அறியும். 

இந்நிலையில் இந்தவிடயத்தை கட்சியின் ஒரு மூத்த போராளி என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றார்.

0 comments:

Post a Comment