சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் அதிரடி நடவடிக்கையும்! தீவிரமடையும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும்!!

(ஹாசிப் யாஸீன்)
சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கு முகமாக இன்று (22) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதிலுள்ள சகல ஜூம்ஆப் பள்ளிவாசலிலும் குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றது. 

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், மஸ்ஜிதுல் தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அக்கபர் ஜூம்ஆப் பள்ளிவாசல், மாளிகைக்காடு மஸ்ஜிதுல் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் விதத்தில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டு தொழுகை முடிவடைந்தவுடன் இறைவனை மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பால் பெற்றுத்தருவதாக வாக்குறுதி பகிரங்கமாக மக்கள் மத்தியில் வழங்கப்பட்டது. 

இதற்கு மேலாக கடந்த பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கல்முனை வந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் அவரது வாயாலும் 'சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்' என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல முஸ்தீபுகளை முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் மேற்கொண்டாலும்; இதன் செயற்பாடுகள் இதுவரை சோபை இழந்த காணப்படுகின்றது. இதனால் சாய்ந்தமருது மக்கள் மத்தியில் இக்கோரிக்கை நிறைவேறுமா? என்ற சந்தேகப் பார்வை நாளுக்கு நாள் வலுவடைகின்றது.

தற்போது கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளுராட்சி சபைகளும் கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடையவுள்ள நிலையிலும், 2017 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் இக்கோரிக்கையினை நிறைவேற்றிக் கொள்ளுமுகமாக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதனடிப்படையில் இதன் முதற்கட்டமே இன்றைய குத்பா பிரசங்கமும், விசேட துஆப் பிரார்த்தனையுமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை, பாதை மாறுகிறது!

(யூ. கே. காலித்தீன்)
தனியான உள்ளூராட்சி சபையை வலியுறுத்தி சாய்ந்தமருது அனைத்து ஜும்மா பள்ளிகளிலும் குத்பாவும், விசேட துஆ பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கையான சாய்ந்தமருத்துக்கான தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கை, கடந்த பொதுத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தரப்பால் துரும்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டு, பிரதமரை கல்முனைக்கு அழைத்துவந்து அவரது வாயாலும் "சாய்ந்தமருத்துக்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்" என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையில், ஆண்டுகள் கடந்து வருகிறதே தவிர, இதற்கான முஸ்தீபுகள் இதுவரை சோபை இழந்த நிலையில் காணப்படுவதாலும், மீதமாயிருந்த கல்முனை மாநகரசபை உட்பட ஏனைய உள்ளூராட்சி சபைகளும் தற்போழுது கலைக்கப்பட்டுள்ள நிலையிலும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்கள் பூர்த்தியடைய உள்ள நிலையிலும், 2017 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான நிலையிலும், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை நிர்வாகக் கூட்டம் இது தொடர்பாக ஆராய்வதற்காக புதன்கிழமை (20) சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலில் தலைவர் அல்-ஹாஜ்.வை.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது இவ் உள்ளூராட்சி மன்ற விவகாரம் விரிவாக ஆராயப்பட்டு, (22) வெள்ளிக்கிழமை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பகுதியில் உள்ள 6 ஜும்மா பள்ளிவாசல்களிலும் உள்ளூராட்சி மன்ற விவகாரம் தொடர்பாக மக்களை விழிப்படையச் செய்வதுடன், அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்தில் குத்பா பிரசங்கங்களை மேற்கொள்வதெனவும், இதன் நிறைவேற்றத்துக்காக இறைவனை மன்றாடும் விதத்திலான விசேட துஆ பிரார்த்தனைகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டதாக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ. அப்துல் மஜீட் தெரிவித்தார்.சாய்ந்தமருது விவாகப் பதிவாளர் முத்து முஹம்மதுவின் 26 வருட சேவைக்கு கௌரவம்!

(ஹாசிப் யாஸீன்)
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று (சாய்ந்தமருது 01) பிரிவுக்கு முஸ்லிம் விவாக பதிவாளராக 26 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்ற எம்.எஸ்.முத்து முஹம்மதுவை பாராட்டி கௌரவிக்கு 'பொன் நினைவு' நிகழ்வு நேற்று (20) புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ஏ.ஜமால் முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, சாய்ந்தமருது பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெவ்வை (எவசைன்), சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் எம்.ஐ.ஆதம்பாவா உள்ளிட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மிக நேர்மையாக விவாக பதிவாளராக கடமையாற்றி எம்.எஸ்.முத்து முஹம்மது பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

அத்துடன் புதிதாக விவாக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ.செய்னுலாப்தீனுக்கு பிரதேச செயலாளர் சலீமினால் விவாகப் பதிவு ஆவணங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.


“கிழக்கின் எழுச்சி” போலிப் பிரச்சாரங்களினால் கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது - அடித்துக் கூறுகிறார் பிரதி அமைச்சர் ஹரீஸ்

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்)
கிழக்கின் எழுச்சிக் கோசம் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு எதிரான சீசன் பிரச்சினையாகும். மக்கள் ஆணையுடன் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை இருக்கின்றது. போலிப் பிரச்சாரங்களினால் எமது கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான கிளைகளை புனரமைப்புச் செய்யும் வேலைத்திட்டத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் சாய்ந்தமருது 11ம் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிளையினை புனரமைப்புச் செய்யும் கூட்டம் நேற்றிரவு (17) ஞாயிற்றுக்கிழமை அமைப்பாளர் இல்லத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கவும் முஸ்லிம் காங்கிரஸினை பலவீனப்படுத்தவும் இன்று சில சீசன் வியாபாரிகள் கிழக்கின் எழுச்சி என்ற பிரதேச வாத கோரிக்கையை முன்வைத்து மக்களை குழப்ப முனைகின்றனர். இவர்களின் குறுநில இச்சையுடைய குறுகிய மனப்பான்மையுடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த பொய்ப்பிரச்சாரம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு எதிராக கடந்த காலங்களில் நுஆ கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரால் சீசனுக்கு சீசன் விடுக்கப்பட்ட சவால்களை எமது கட்சி மக்கள் ஆணையுடன் அவைகளை தோற்கடித்துள்ளது என்பதை இந்த கிழக்கின் எழுச்சி கொந்துராத்துக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் யாப்பினை கொண்டமைந்த ஒரு கட்சியாகும். முஸ்லிம் உம்மா என்ற அடிப்படையில் இந்த சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கட்சி உருவாக்கப்பட்டது. அந்த வகையில் மறைந்த பெரும் தலைவர் அஷ்ரஃப் சில வசியத்துக்களை சொல்லி இருக்கின்றார். மேடை மேடையாக முதலாவதாக அவர் சொன்ன விடயம் பிரதேச வாதங்கள் கழைந்தெறியப்பட வேண்டும் என்பதாகும். எனவே ஒரு தேசிய ரீதியான கட்சியின் தலைமைக்கு பிரதேச வாத வரம்புகளை போட விளைவது முட்டாள் தனமானதாகும்.

பொதுபல சேனா போன்ற சிங்கள தீவிரவாத குழுக்களின் அழுத்தம் அரசுக்கு உள்ள இந்தக் காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இவ்வாறான காலகட்டத்தில் கட்சியில் சம்பந்தமில்லாத, கட்சியோடு எந்தவித உத்தியோக பூர்வ தொடர்பும் அற்ற சிலர் கட்சிக்கு வெளியே இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்துக்குரிய ஒரு கட்சி, கிழக்கான் ஆழ வேண்டும், கிழக்கின் எழுச்சி என்ற கோசத்தை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சுவர் ஒட்டிகள் மூலமாகவும் முன்னெடுத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் என்ற வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரிதிநிதி என்ற வகையிலும் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமுடையவர். அவரிடம் இருக்கின்ற தலைமைத்துவ பண்பு, பக்குவம் மிக்க செயற்பாடு, ஆற்றல் என்பவற்றின் காரணமாக இந்த சமூகத்தை அவர் தொடர்ந்தும் வழிநடத்த வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால் கிழக்கு வடக்கு என்பதற்கு அப்பால் ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதை போன்று எமது உயிரிலும் மேலாக நேசிக்கின்ற நபி(ஸல்) அவர்களை நின்தனை செய்கின்ற, அல்லாஹ்வுக்கு சவால்விடுக்கின்ற அளவுக்கு இந்த நாட்டில் மத சுதந்திரம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் எமது இளைஞர்களின் கொதித்துக் கொண்டிருக்கின்ற இரத்தம் முஸ்லிம் உலமாக்கள், மத தலைவர்களின் மத போதனைகள் மற்றும் வேண்டுதல்களினால் அமைதியாக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் பாரிய விபரீதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுமை காத்திருக்கின்றோம்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இச்சமூகத்திற்கு ஏற்படுகின்ற சவால்களை வென்றெடுப்பதற்கு முஸ்லிம் உம்மா என்ற அடிப்படையில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை கூறுபோடுகின்ற பிரதேசவாத நச்சுக் கருத்துக்களுக்களை முஸ்லிம் சமூகத்தில் பரப்புகின்ற நயவஞ்சகர்கள் தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதோடு இவ்வாறான போலிப் பிரச்சாரங்களினால் எமது கட்சியின் தலைமையினை ஒருபோதும் மாற்ற முடியாது எனவும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். 


சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பித்து வைப்பு!

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்)
கல்முனைப் பிராந்தியத்தில் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டின் தாய்க் கழகமான சாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டி சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முழு அனுசரணையில் ரீ-10 கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.

பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வங்கியலாளர் எம்.எம்.மசூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

ஆரம்ப போட்டியில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனை பிறைட் பியுச்ச விளையாட்டுக் கழகமும் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக் கழகமும் மோதியது. 

இதில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன் மற்றைய போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.

முஸ்லிம்கள் நாட்டில் மதக் கடமைகளை சுதந்திரமாக மேற்கொள்ள பிரார்த்திப்போம் - பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதி அமைச்சர் ஹரீஸ்

பகல் முழுவதும் பசித்திருந்து, இரவு முழுவதும் நின்று வணங்கி பாவங்களைக் கரியாக்கி, பகமைகளை வெறுத்து உறவுகளுடன் ஒன்றிணைந்த புனித மாதம் எம்மைவிட்டுப் பிரிந்து அந்த மாதத்தின் அறுவடை நாளான ஈகைத் திருநாள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இன்று பயங்கரவாதமும், இனவாதமும் தோற்கடிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக இன, மத வேறுபாடின்றி அந்நியோன்யமாக பழகக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இப்பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சியில் இனங்களுக்கிடையே நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் இச்சந்தர்ப்பத்தில் சில பேரினவாதக் குழுக்கள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு அமைதியற்ற சூழலை உருவாக்க முற்படுகின்றனர். இதற்கு முஸ்லிம்கள் இடங்கொடுக்காது பொறுமை காக்க வேண்டுகின்றேன்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் இன,மத வேறுபாடின்றி உதவிக்கரங்கள் நீண்டப்பட்டன. இதன் மூலம் நாட்டு மக்களிடையே இனவாதம், மத வாதம் இல்லை என்பதை இந்த இனவாதக் குழுக்களுக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர்.

முஸ்லிம்கள் எமது நாட்டில் மதக் கடமைகளையும், போதனைகளையும் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இப்புனித நோன்புப் பெருநாளில் அனைவரும் இறைவனிடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக எனவும் குறிப்பிட்டுள்ளார்.சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார்!

(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு இன்று (04) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.எம்.அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, கணக்காளர் எம்.எம்.உசைனா உள்ளிட்ட பிரதேச செயலக நலன்புரிச் சங்க செயலாளர் எம்.இஷாக், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வர்த்தக சமூகத்தினர், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் ரமழான் பற்றிய நற்சிந்தனையினை அஷ்-ஷெய்க் சட்டத்தரணி என்.எம்.முஜீப் நிகழ்த்தினார். 

இவ் இப்தார் நிகழ்வின் நன்றியுரையினை திவிநெகும பிரதேச முகாமையாளர் அல்-ஹாஜ் ஏ.சீ.ஏ.நஜீம் நிகழ்த்தினார். 

இப்தார் நிகழ்வுகள் யாவும் பிறை எப்.எம். வானொலியில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலினால் பேரீச்சம்பழம் விநியோகம்

(எம்.வை.அமீர்,ஹாசிப் யாஸீன்)
முஸ்லிம் சமய, கலாச்சார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் அமைப்புக்கு வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களை அவ்வமைப்பின் மகளிர் அணிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26) ஞாயிற்றுக்கிழமை மருதம் கலைக்கூடல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

மருதம் கலைக்கூடலின் பிரத்தித் தலைவர் ஸாஹிர் கரீமின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவ் அமைப்பின் தலைவரும் முஸ்லிம் சமய கலாச்சார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் இணைப்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனைத் தொகுதி பிரச்சார செயலாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா பிரதம அதிதியாக கலந்து பேரீச்சம் பழங்களையும் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் அமைப்பின் செயலாளர் எம்.ஐ.எப்.ஸஜீனாஸ், உதவித் தபாலதிபர் எம்.எம்.எம்.முபாறக், எம்.ஐ.ஜௌபர், எம்.ஆர். ரோஷன், யூ.கே.அஸாம், எம்.ஐ.சித்தீக் மற்றும் தவிசாளர் உவைஸ் முகம்மட் ஆகியோரும் அமைப்பின் அங்கத்தினர்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.


அமைச்சர் றிசாட்டுக்கும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்திற்குமிடையே சந்திப்பு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஸாத் பதியுதீனக்கும்அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போர உறுப்பினர்களுக்குமான சந்திப் பொன்று இன்று (24) சாய்ந்தமருது கடற்கரை வீதி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனதலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் ஏற்பாட்டின் பேரில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்போரத்தின் தலைவர் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பில் போரத்தின் எதிர்காலசெயற்பாடுகள் பற்றியும் கடந்த காலங்களில் போரத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள்பற்றியும் கலந்துரையாடப்பட்டது.சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட்டினால் கடற்கரை துப்பரவு பணி அங்குரார்ப்பனம்!

(யூ.கே.காலித்தீன்)
சாய்ந்தமருது கடலின் அடிப்பரப்பை துப்பரவு செய்யும் வேலைத் திட்டம் இன்று (24) வெள்ளிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இக்கடல் பகுதியினுள் கட்டிட இடிபாடுகள் மற்றும் கழிவுப் பொருட்கள் அள்ளுண்டு சென்று தேங்கிக் கிடப்பதனால் அவை மீன்பிடி தொழிலுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகின்றன.

இதனால் கரைவலை மீன்பிடி தொழில் கடந்த பல வருடங்களாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வலைகள் வெட்டுப்படுவதனால் தாம் நஷ்டமடைவதாகவும் இப்பிரதேச மீனவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அரச வர்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. குழுத்தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீலின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் மேற்படி வேலைத் திடடத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வேலைத் திடட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.